Monday, October 27, 2025 3:40 pm
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் சந்தேகநபர், நேற்று மாலை மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த துபாயிலிருந்து உத்தரவு கிடைத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். தனிநபரிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில் தான் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழு உறுப்பினர் மிதிகம ருவன் மற்றும் சூட்டி எனப்படுபவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், துபாயிலிருந்து வழங்கப்பட்ட குறித்த ஒப்பந்தத்திற்காக கொலையாளிக்கு 15 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அண்மையில் பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

