Wednesday, December 17, 2025 11:47 am
பண்டிகைக் காலத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
பணத்தைக் கையாளும் போது போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் , பெரும்பாலும் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்களே புழக்கத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இதுபோன்று நாணயத்தாள்கள் புழக்கத்திலிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 535 போலி 5000 ரூபாய் தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் , போலி பணத்தாள்கள் அச்சிடுதல் , அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் , போலி நாணயத்தாள்கள் தொடர்பான அனைத்து புகார்களையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

