Tuesday, December 2, 2025 10:31 am
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2025 நவம்பரில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 2.1 ஆக சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது.
தொடர்ந்து எட்டு மாதங்களாக உயர்ந்த நிலையில் இருந்த பணவீக்கமானது இந்த மாதத்தில் எவ்வித மாற்றமின்றியும் அதே நிலையில் காணப்படுகின்றது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பணவீக்கமானது 3.5 சதவீதமாக பதிவாகியிருந்ததாகவும் , கடந்த நவம்பரில் 3.0 சதவீதத்திற்கு குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு என்ற அடிப்படையில் கடந்த ஒக்டோபரில் 1.4 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில் நவம்பர் மாதத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாதத்திற்கு மாதம் என்ற அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2025 நவம்பரில் 0.23 சதவீதத்தினால் குறைவடைந்தது.
இதற்கு, உணவு வகைகள் -0.18 சதவீதப் புள்ளிகளினால் பங்களித்ததுடன் உணவல்லா வகை -0.05 சதவீதப் புள்ளிகளால் பங்களித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

