Friday, October 24, 2025 11:43 am
ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் (23) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
நேற்றைய போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களைக் குவித்தது.
ஸ்ம்ரித்தி மந்தனா, ப்ரத்திகா ராவல் ஆகியோர் குவித்த அபார சதங்கள், ஜெமிமா ரொட்றிகஸ் பெற்ற அரைச் சதம் என்பன இந்தியாவை வலுவான நிலையில் இட்டன.
இந்தியா 48 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் பிற்பகல் 6.21 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்த போது இந்தியாவுக்கு மேலும் ஒரு ஓவர் வழங்கப்பட்டது.
அந்த ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது.
நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் சிறு மழையினால் தாமதித்ததால் அதன் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 44 ஓவர்களில் 325 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 44 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்ததுடன் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பையும் பறிகொடுத்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றி கொண்ட இந்தியா, அரை இறுதியில் விளையாட நான்காவது அணியாகத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

