Monday, March 9, 2026 11:09 am
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனேகமானோரின் எதிர்பார்ப்பாக 10வது ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி காணப்பட்டது.
அனைவரினதும் எதிர்பார்ப்புடனும் ஆரவாரத்துடனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி மின்னொளியில் இனிதே ஆரம்பமானது.
இந்தப்போட்டியில் இந்தியாவை நியூஸிலாந்து அணி எதிர்த்து விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தார்.
ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது அணி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது அணி, மூன்று தடவைகள் சம்பியனான முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டும் குறிக்கோளுடன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணி துடுப்பெடுத்தாடியது.
தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கடைசியாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளில் கூட்டாக நடத்தப்பட்ட 9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்திலும் சம்பியனான இந்தியா நேற்று இறுதிப் போட்டியில் விளையாடியது.
அதேபோன்று ரி20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்றெடுக்கும் குறிக்கோளுடன் மிச்செல் சென்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி களம் இறங்கியது. துபாயில் 2021இல் நடைபெற்ற 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அவுஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து இரண்டாவது தடவையாக இந்தியாவை எதிர்த்து நேற்று இறுதிப் போட்டியில் விளையாடியது.
இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் கொண்ட அணிகளாக தென்படுவதால் இறுதிப் போட்டி இறுக்கமாக அமையும் என்பது அனைவரது எண்ணமாகக் காணப்பட்டது.
அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தனர்.
அதேபோன்று டிம் சீஃபேர்ட், ஃபின் அலன், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் சப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர், கோல் மெக்கொன்ச்சி, மெட் ஹென்றிஃ, இஷ் சோதி மற்றும் லொக்கி ஃபேர்கசன் ஆகியோர் நியூஸிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தனர்.
அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.
சஞ்சு செம்சன், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 98 ஓட்டங்களைக் குவித்து பலமான ஆரம்பத்தை கொடுத்தனர். அவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் பகிர்ந்த 93 ஓட்டங்கள் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பவர்ப்ளேயில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இடம்பிடித்தது.
அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்த வருட உலகக் கிண்ணத்தில் அதிவேக அரைச் சதத்தைப் பதிவுசெய்தார். 21 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 6 பவுண்டறிகள். 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார்.
10வது உலகக் கிண்ணத்தில் தனது 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பெற்ற சஞ்சு செம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.
16ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களைக் குவித்திருந்த இந்தியா அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்தது. இஷான் கிஷான் 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார். ஷிவம் டுபே 8 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 255 ஓட்டங்களாக உயர்த்தினார்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷாம் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
டிம் சீஃபேர்ட், ஃபின் அலன் ஆகிய இருவரும் 16 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆரம்ப வீரர் டிம் சீஃபேர்ட் 26 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தபோது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை வெறும் 72 ஓட்டங்களாக இருந்தது. டெறில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறிது பலப்படுத்தினர். மிச்செல் சென்ட்னர் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தபோது நியூஸிலாந் தனது தோல்வியை தழுவிக் கொண்டது.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், அக்சார் பட்டேல் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடியபோது அந்த அணியின் பிரதான வீரர்கள் மூவரின் விக்கெட்களை அக்சார் பட்டேல் கைப்பற்றியதுடன் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இந்தியாவின் வெற்றியை சுலபப்படுத்தினர்.
10வது ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது உலகக் கிண்ண மகுடத்தைத் தக்கவைத்ததோடு 2007 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த தொடரின் சிறப்பாட்டக்காரராக சஞ்சு சாம்சன் தெரிவானதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜஸ்பிரிட் பும்ரா தெரிவானார்.

