Friday, October 31, 2025 7:03 pm
பிராந்தியம் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மேலும் விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தில் (Defence Cooperation) அமெரிக்க – இந்திய அரசுகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்க – இந்திய அரசுகளிடையே பாதுகாப்பு – பொருளாதாரம் உள்ளிட்ட இராஜதந்திர உறவை மேம்படுத்தும் என நம்புவதாக இரண்டு அரசுகளும் தெரிவித்துள்ளன என்று ரொய்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரசியாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக 25% அபராதத்தை இந்தியா மீது விதித்திருந்தார். அத்துடன் இந்தியா மீது 50% வரிகளையும் விதித்திருந்தார். இதனால் அமரிக்க – இந்திய வர்த்தக செயற்பாடுகள் மாத்திரமல்ல, அரசியல் – இராணுவ ஒத்துழைபை்புகளிலும் இடைவெளி ஏற்பட்டிருந்தது. பணிப்போரும் நிலவியது.
ஆனால் மலேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கிடையேயும் நல்லுறவை மீண்டும் வளர்க்கும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலை-ஓகஸ்டில் முடிவடைந்திருக்க வேண்டும், ஆனால் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் ட்ரம்பின் பங்கு பற்றிய செயன் முறைமைகளில் (Action System) இந்தியா அதிருப்பதியடைந்திருந்தது.
ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்க – இந்திய கூட்டு இராணுவச் செயற்பாட்டுக்கும் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விரிவாகத்துக்கும் துணை நிற்கும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தமது பிராந்திய பாதுகாப்பு பற்றி முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். ரசியாவிடம் இந்தியா இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது பற்றிய பேச்சும் முக்கியம் பெற்றிருந்தது. அதாவது இந்தியா எண்ணெய்க் கொள்வனவை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் எதிர்பார்த்திருந்தார்.
கடந்த சில மாதங்களில் அமெரிக்காவிடமிருந்து எரிசக்திகளை கொள்வனவு செய்ய தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்திருந்தது.
இப் பின்னணியில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்க இந்திய உறவுக்கு வலுச் சேர்க்கும் என நம்பப்படுகிறது. அதேநேரம் ரசிய – இந்திய உறவு பற்றிய கேள்விகளும் எழுகின்றன.


