Monday, January 26, 2026 12:18 pm
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமுமாகும். பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்.
இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் என தெரிவித்தார்.
விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டடத்துக்கான பெயர்ப்பலகையை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து நாடா வெட்டி கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

107 பேரின் 142 லட்சம் ரூபா பங்களிப்பில் இந்த முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


