Friday, October 24, 2025 2:29 pm
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புள்ள மற்றும் பணம் சம்பாதித்து வரும் முக்கியமான அரசியல்வாதிகளின் பெயர்களை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடியபோது, மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினர். தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் அவர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நலிந்த திஸ்ஸ, வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார். கொலையாளிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் கூறினார்.
உயிரச்சுறுத்தல் உள்ள அரசியல்வாதிகள் பற்றி புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது. அந்த அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் நலிந்த திஸ்ஸ விளக்கினார்.
அதேவேளை, பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள அரசியல்வாதிகளின் பெயர் விவரங்களையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் இவ்வாறு கூறியபோது சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசாங்கம், பாதாளக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி மக்கள் பிரதிநிதிகளின் சேவைகளை கொச்சைப்படுத்துவதாகவும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சஜித் பிரேமதாச மீண்டும் சபையில் வலியுறுத்தினார். நேற்று புதன்கிழமையும் அவர் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

