Thursday, January 8, 2026 12:44 pm
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகி ஜனவரி மாதம் 20ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அதே பரீட்சை நிலையங்களிலேயே பரீட்சைகள் நடைபெறும் எனவும் அனர்த்தங்களினால் சேதமடைந்த பரீட்சை நிலையங்களுக்குப் பதிலாக மாற்று இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வித இடர்பாடுமின்றி பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை உறுதி செய்ய விசேட போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இவை தொடர்பான மேலதிக விபரங்களையும், திருத்தப்பட்ட கால அட்டவணையையும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 இணைப்பு நிலையங்கள் செயற்படும் என இந்திகா குமாரி லியனகே கூறியுள்ளார்.
பரீட்சை விடைத்தாள்களைச் சேகரிப்பதற்காக 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்கள் இயங்கும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்தது.

