Thursday, January 22, 2026 10:32 am
ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் 24ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின்போது விளையாட்டு ரசிகர்கள் இந்த தங்கக் கோப்பையை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கோப்பையை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதுடன், அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு ரசிகர்கள் உலகக் கோப்பையுடன் புகைப்படங்களை எடுக்கவும், அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், பல்லேகலே சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானம் ஆகியவற்றை இலங்கையில் நடத்தப்படும் போட்டிகளுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தது.
8 போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும், 5 போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும், 7 போட்டிகள் பல்லேகலே சர்வதேச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இம்முறை 20 நாடுகள் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன், அதில் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் அணி போட்டியிடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். அதேபோன்று பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால், அந்த இரண்டு போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுவதோடு, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும். மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நெமீபியா, நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

