Friday, October 24, 2025 11:14 pm
இரண்டு தேங்காய் திருடப்பட்டதாக கூறப்பட்ட தகராறில், தேங்காய் பறிக்கப் பயன்படுத்திய உலோக கம்பியை பயன்படுத்தி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி ஒருவருக்கு கொழும்பின் புநகர் பகுதியில் உள்ள ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி, நவரத்ன மாரசிங்க இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை (Death Sentence) விதித்தார்.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி நியடகல – வெலிய பிரதேசத்தில், உலோக தேங்காய் பறிக்கும் இயந்திரத்தால் பாதிக்கப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி நீண்ட விசாரணை நடத்திய பின்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி சட்ட மா அதிபர் திணைக்களம் நிரூபித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தனது சுய கட்டுப்பாட்டை இழந்து தற்செயலாக கொலை நடந்தது என எதிரிதரப்பு முன்வைத்த விவாதத்தை நிராகரித்த நீதிபதி, திடீர் ஆத்திரமூட்டல் அல்லது ஏதேனும் அசாதாரண மன நிலையின் கீழ் இந்தக் கொலை நடக்கவில்லை என்று கூறி தீர்ப்பளித்தார்.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை மதிப்பீடு செய்த நீதிபதி, முதலாவது குற்றவாளியான ரஞ்சித் தர்மசேனவுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் கொலைக்குற்றவாளி என தனது தீர்ப்பில் விபரித்தார்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி மாரசிங்க, கூட்டாகவும் தனித்தனியாகவும் முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த பின்னர், முதல் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டின் அனைத்து அத்தியாவசிய கூறுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால், சட்டமா அதிபர் திணைக்களம் நிரூபித்துள்ளது என்பது நீதிமன்றத்திற்கு தெளிவாகத் தெரிகிறது.
விசாரணையின் போது மரணமடைந்த இரண்டாவது குற்றவாளி அல்லது மூன்றாவது குற்றவாளிக்கு எதிராக ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது நம்பகமான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி, இரண்டாவது குற்றவாளி கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்த நீதிபதி, அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
ஆனால் முதலாவது குற்றவாளியான கோட்டகே ரஞ்சித் தர்மசேனவுக்கு எதிராக சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவாக கூறினார்.
அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த கொலைக் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

