Monday, March 16, 2026 11:51 am
இலங்கையின் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மற்றும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அடிக்கடி அதிகளவு நீரை அருந்துதல், வயல் வெளிகள் மற்றும் திறந்தவெளி கட்டுமானத் தளங்களில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்த்தல், வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் தேவையற்ற முறையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

