Monday, March 16, 2026 10:12 am
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த மீன்பிடி படகு இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இந்நிலையில் பலநாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அதில் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 3 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர். இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 7 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

