Monday, January 19, 2026 4:07 pm
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
டித்வா புயலினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனால் இது தொடர்பான சுற்றறிக்கையில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் மற்றும் அரச கணக்காளர்கள் சங்கம் என்பன ஏற்கனவே இந்தப் பணிகளில் இருந்து விலகியிருந்தன.
இதனையடுத்து அந்தப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் இன்று முதல் தாங்களும் அந்தப் பணிகளில் இருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

