Thursday, January 8, 2026 12:50 pm
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான விவாதங்களை தீர்மானிக்கும் “நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம்” ஏன் இந்த வாரம் நடைபெறவில்லை என்று கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிமல் ரத்நாயக்க இரண்டு முக்கிய சட்டவாக்கங்கள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக அரசு காத்திருப்பதாகக் கூறினார்.
எதிர்க்கட்சியினர் தயாரித்து வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிலையியற் கட்டளைகளின்படி முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதால், அதனையும் கருத்திற் கொண்டு கூட்டத்தை நடத்த அரசாங்கம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வு நாட்களிலேயே விவகாரக் குழுக் கூட்டத்தை நடத்துவதுதான் வழமையான நடைமுறை என்று சுட்டிக்காட்டிய கயந்த கருணாதிலக்க, விவாதங்களுக்குத் தயாராவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில் விவகாரக் குழுக் கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்று பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.

