Wednesday, October 22, 2025 7:31 pm
ஜெனிவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் ஜெனிவா விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த முடியும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி விவாதத்தை நடத்துவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 4 ஆம் திகதி வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கைத்தீவுக்கு வருகை தரவுள்ளார். இதனால் அன்றை நாள் விவாதத்தை நடத்த முடியாது என சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜித ஹேரத், வேறொரு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு பதிலளித்தார்.
ஜெனிவா விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரக் குழுவில் உரையாடி விவாதம் நடத்த வசதியான திகதியை தீர்மானிக்கலாம் எனவும் விஜித ஹேரத் மேலும் விளக்கமாக கூறினார். .
அதேவேளை, ஜெனிவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் இந்த ஆண்டு அதாவது கடந்த சமாதம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் A/HRC/60/21) பக்கங்கள் 8 தொடக்கம் 11 வரை இந்த மூன்று பிரிவுகளாக உண்மைத் தேடல் பொறிமுறை (A. Truth-seeking mechanism) அடையாளச் சின்னங்களாகி விட்ட குற்றங்களுக்கான உள்நாட்டு நீதி (B. Emblematic cases) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான பொறுப்புக்கூறல் (C. Accountability for Easter Sunday attacks) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்த விடயம் கூட, இலங்கைக்கு சாதகமாகவுள்ள நிலையில் அநுர அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
அதேவேளை, ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் ஜெனிவா நிறைவேற்றிய 60/1 தீர்மானத்தை அநுர அரசாங்கமும் நிராகரித்துள்ள நிலையில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தை முற்றாகவே நிராகரித்திருந்தார்.
அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (Oslap -OHCHR Sri Lanka accountability project) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.
புதிய அரசாங்கம் என்று கூறி, ஜெனிவா ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில், இன அழிப்பு என்று தமிழர்கள் கோருகின்ற விடயம் முற்றாகவே கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஒப்பாசாரத்துக்குக் கூட அது பற்றிய வார்த்தைகளே இல்லை.
தொடர்ச்சியான முறையில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஐ.நா நியமங்களையும் மனித உரிமைச் சபையின் தீர்மானங்களையும் புறக்கணித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் ஐ.நா, இலங்கை மீது நம்பிக்கை வைக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றன.
2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஈழத் தமிழர்களுக்கு ஒழுங்கான அரசியல் தலைமை இல்லை என்பது வேறு. ஒருமித்த குரல் செயற்பாடுகள் இல்லை என்பதும் வேறு.
ஆனால், அவற்றைக் காரணம் காண்பித்து 2012 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் இலங்கை செயற்படுத்தவில்லை என்பதை ஏன் மனித உரிமைச் சபை 2025 இல் இடம்பெற்ற அமர்வில் கவனத்தில் எடுக்கவில்லை என தமிழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.