Friday, March 20, 2026 12:30 pm
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப் போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
கடந்த சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று மூன்று மாணவர்களிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது மாணவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழங்கியிருந்தார்.
தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் வெளிப்படுத்தும் விதமாகவே பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களின் உணர்வுபூர்வமான மற்றும் நியாயமான ஒரு விடயமாகும். மாணவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸார் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் துணை நிற்போம்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கவுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் உறுதியளித்துள்ளார்.

