Tuesday, March 10, 2026 10:24 am
இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாக உயர்ந்துள்ளது. 340 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 365 ரூபாவாக உயர்ந்துள்ளது.
281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 303 ரூபாயாக உயர்ந்துள்ளது. 329 ரூபாயாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 353 ரூபாவாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.
அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது. இந்த விலை மாற்றம் நள்ளிரவுடன் நடைமுறையாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது.
“ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். உலக அமைதிக்காக நாம் செய்யும் ஒரு சிறிய நிதித் தியாகம் இது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் முட்டாள்கள்” என எரிபொருள் விலை உயர்வு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் (Inflation) பாரியளவில் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா எச்சரித்துள்ளார்.

