Sunday, November 2, 2025 7:24 pm
இந்தியாவின் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை முத்துக்கும்பம் பகுதிக்கு அருகில் உள்ள எண்ணூர் (Ennore) கடலில், இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் உட்பட, நான்கு பெண்கள் அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நியுஇந்தியன் எக்ஸ்பிறஸ் (newindianexpres) என்ற ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
17 வயதான ஷாலினி 18 வயதான காயத்திரி, 19 வயதான பவானி, 30 வயதுடைய தேவகி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நான்கு பெண்களும் சென்னையின் புநகர் பகுதியான கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் புடவைக் கடடையில் பணிபுரிபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்களில் தேவகி என்ற பெண் தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் என நியுஇந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு பெண்களும் எண்ணூர் கடற்கரையில் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுள்ளனர். தண்ணீருக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி என்ற பெண், இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில், காயத்திரி, பவானி, தேவகி ஆகியோர் கடலுக்குள் இறங்கியுள்ளனர். ஆனால் அதிகரித்த நீரோட்டத்தால், இந்த மூன்று பெண்களும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவத்தை அறிந்த உள்ளூர் மீனவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பொலிஸாரின் உதவியுடன் பெண்களின் உடல்களை மீட்டனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து எண்ணூர் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

