Thursday, October 30, 2025 9:08 am
ஜப்பான், ரசிய, இஸ்ரேல் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகங்களில் (SLBFE) கடமைபுரியும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சிலர், கடந்த சில நாட்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகத்தில் நடத்திய சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளின் போது, இந்த நான்கு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, இந்த நான்கு பேரும், பொது மக்களை ஏமாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான நால்வரில் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், கனடாவில் நோயாளர் பராமரிப்பு பிரிவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 8 பேரிடம் ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் கடுவெல நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மாலை முன்னிலைப்படுத்தப்பட்டார். தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இவர் விடுதலை செய்யப்பட்டார்.
இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட மற்றொரு சந்தேகநபர், கொட்டாவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் – பெண்களிடம் 20 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை எட்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இதேபோன்று மோசடிகளில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குறிப்பாக ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மக்களை ஏமாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் பற்றிய வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், பாணந்துறை நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டவர்களில் அனேகமோனோர் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

