Saturday, December 13, 2025 2:08 pm
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், இரணைப்பாலையைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பலத்த காயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் , புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட வீரராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் உதைபந்தாட்ட நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனமும் அதன் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வீதி போக்குவரத்து பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சாரதி கடந்த 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை இன்று சனிக்கிழமை (13) நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

