Thursday, February 19, 2026 10:15 am
குடும்ப தகராறால் பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து மனைவியை போத்தலால் தாக்கி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது.
குடும்ப தகராறினால் கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளார். ஆசிரியரான பெண் மேலதிக வருவாயை பெறும் நோக்குடன் வீட்டின் முன்பாக சிறிய வியாபர நிலையம் ஒன்றினையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வழமை போன்று தனது வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை கணவன் மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மதுபான போத்தலால் தலையில் தாக்கியுள்ளார். உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தாய் மீது தந்தை தாக்குதலை நடத்தும் தந்தையை, அவரது சிறுவயது மகன் தடுக்கும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்த நிலையில், அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற அப்பெண்ணின் கணவனை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

