Monday, March 23, 2026 4:06 pm
பதுளை – பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனையின் போது பீக்கர் (Beaker) வெடித்ததில் ஆசிரியை ஒருவரும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய இரு மாணவிகளும், 48 வயதுடைய ஆசிரியை ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலை மற்றும் பதுளை போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கான அறிவியல் பாடப்பரிசோதனையின் போது, அதற்கு பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட இரசாயன பொருட்கள் அடங்கிய பீக்கர் ஒன்றை வெப்பம் ஏற்றும் போதே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

