Tuesday, February 24, 2026 4:24 pm
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், நியூயோர்க் உட்பட வடகிழக்கு பகுதியில் பனிப்புயல் வீசிவருகிறது. அந்நாட்டு தேசிய வானிலை மையம், கடுமையான காற்றுடன் அதிக பனியைக் கொட்டும் புயலுக்கான ‘ப்ளிசார்டு’ எச்சரிக்கையை, ஒன்பது ஆண்டுக்குப் பின் விடுத்தது.
பனிப்புயலின் தாக்கத்தால் பல இடங்களில் 3 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. இதையடுத்து நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் நியூயோர்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார். கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை, நேற்று ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுதும் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகர பள்ளிகள் முழுதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லாத அளவு தாக்கிய பனிப்புயல் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

