மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இரண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கும் உரிய மின்சார கட்டணம் பற்றிய திருத்தம் மேற்கொள்ளப்படாது என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.பி சந்திரலால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மின்சாரக் கட்டணம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த பேராசிரியர் சந்திரலால், ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மின் கட்டணம் அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்று கூறினார்.
எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிவரை தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரக் கட்டணத் திட்டம் அமுலில் இருக்கும் எனவும், அடுத்த ஆண்டு முதற் பகுதியில் புதிய மின்சாரக் கட்டணம் தீர்மானிக்கப்படும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்காக 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பை ஏற்கனவே முன்மொழிந்திருந்தது.
ஆனால் இந்த அதிகரிப்புத் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பிரகாரம் கட்டண அதிகரிப்பை ஒத்தி வைப்பதாக பேராசிரியர் சந்திரலால் தெரிவித்தார்.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் புதிய பரிந்துரைகள் தயாரிக்கப்படும் என்றும் அப் பரிந்துரைகளின் பிரகாரம் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்களை வகுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார்.அதே வேளை மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு மின்சார சபை ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது