Tuesday, January 6, 2026 2:04 pm
நாட்டில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் முறையான திட்டமிடல் மற்றும் ஆலோசனைகள் இன்றி முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் கூட இல்லாத நிலையில் இணையவழி மற்றும் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. இத்தகைய வசதிக் குறைபாடுகளால் கிராமப்புற மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும், இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கிடையே பாரிய சமூக இடைவெளியை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இலங்கையின் பாரம்பரிய வரலாறு, கலாசாரம் மற்றும் மத விழுமியங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர் மாணவர்களை வெறும் நுகர்வோர் கலாசாரத்திற்குள் தள்ளும் முயற்சி இதுவெனக் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக சிறுவர்களுக்குப் பாலினக் கல்வியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் முன்வைத்துள்ள ஆட்சேபனைகளை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் கல்வித் துறையில் பணியாற்றும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் கருத்துகளைப் பெறாமல், ஒரு சிலரின் விருப்பத்திற்கு அமைய பாடத்திட்டங்களையும் பாடசாலை நேரத்தையும் மாற்றுவது மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் எனத் தெரிவித்த அவர் கல்வி என்பது அரசியல் தேவைகளுக்காக மாற்றப்படாமல் ஒரு தேசியக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

