எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வரும் வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்றும், இது பற்றி அநுர அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் சஜித் சுட்டிக் காட்டினார்.
கொழும்பில் புறநகா் பகுதியான மத்துகம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரத் தயங்குவதாகவும் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே பெறப்பட்ட கடன்களை 2028 ஆம் ஆண்டு மீளச் செலுத்த வேண்டும. அவ்வாறு செலுத்தினால் டொலருக்கு தட்டுப்பாடு எனவும் கூறிய அவர், டொலர்களை பெறக் கூடிய அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
வருடம் ஒன்றுக்கு கடன்களை மீள செலுத்த ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. ஆனால் கடன்களை மீள செலுத்த இலங்கைத் திறைசேரியின் கையிருப்பில் இருக்கும் டொலர்களை பெற முடியாது. ஆகவே பெரும் நிதி நெருக்கடி ஒன்றை இந்த அரசாங்கம் எதிர்நோக்கும் என சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.
