Monday, December 8, 2025 9:26 pm
ஜப்பான் மிசாவா மாநிலத்துக்கு அருகே இன்று திங்கட்கிழமை இரவு 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7.45 இற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வானிநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் பிரகாரம், இது ஆபத்தான நில நடுக்கம் என்று நியூயோர்க் ரைம்ஸ் (new york times) என்ற அமெரிக்க செய்தி இணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 53.1 கிமீ ஆழத்தில் 14:15 மணிக்கு (UTC) பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள மிசாவா நகருக்கு கிழக்கு-வடகிழக்கே 73 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் தாக்கியதாக கூறப்படுகிறது, இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பான் மற்றும் ரசியாவின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் ஜப்பான் நிலநடுக்கத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ரொய்டர்ஸ் (Routers செய்தி நிறுவனத் தகவலின் பிரகாரம், கிழக்கு ஜப்பான் ரயில்வே அப்பகுதியில் சில ரயில் சேவைகளை நிறுத்தியதுள்ளது. ஏனைய போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்தியா மற்றும் இலங்கைத்தீவுக்கும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தெற்காசியாவில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை அவதானித்து பொது மக்களுக்குத் தகவல்கள் வழங்கப்படும் என்றும், இதனால் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இலங்கை வானிநிலை அவதான நிலையம் இன்று திங்கட்கிழமை இரவு அறிவித்துள்ளது.

