Tuesday, October 28, 2025 1:00 pm
பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பவர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் இலங்கையின் தேசிய அரசியல் செயற்பாட்டில் ஈடுபட முற்படுவதாக பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் சில செயற்பாடுகள் அரசியலில் ஏற்கனவே ஒன்றித்து விட்ட ஒரு நிலையில், போதைப்பொருள் வியாபாரிகளும், பாதாள உலக குழுத்தலைவர்களும் அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் இலங்கையின் நிலை எப்படி இருக்கும் என்றும் பொலிஸ் மா அதிபர் கேள்வி எழுப்பினார். கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் இக் கருத்தை வெளியிட்டார்.
ஆகவே பிரதான அரசியல் கட்சிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிட வேட்பாளர்களை தேடுகின்ற போது போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலக குழுக்களை சேர்ந்தவர்கள் இலகுவாக கட்சி அரசியலுக்குள் இணைந்து விடுவார்கள் என்று சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர், வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது ஒவ்வொரு கட்சிகளும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வேட்பாளர்களை தெரிவு செய்யும் விடயத்தில் பொதுவான தீர்மானம் ஒன்றை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு என்றும் பொலிஸ் மா அதிபா் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் வியாபாரம் போன்ற திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்சி அரசியலுக்கு வந்த பின்னர், வெள்ளை ஆடை அணிந்து கொண்டு கறுப்பு வேலைகளை மிக இலகுவாக செய்வார்கள் என பொலிஸ்மா அதிபர் மேலும் விளக்கமளித்தார்.

