Thursday, March 5, 2026 1:58 pm
ஆபத்தான முறையில் லொறியைச் செலுத்திய நபரைக் கைது செய்யச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடையைக் கிழித்ததாகக் கூறப்படும் லொறி சாரதியைக் கைது செய்துள்ளதாகக் களுத்துறை தெற்குத் தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.
சந்தேகநபர் பலாத்தொட்ட வீதியிலிருந்து கட்டுக்குருந்த நோக்கி லொறியைச் செலுத்தியுள்ளதுடன், நாகொட சந்தியிலுள்ள வீதித்தடையில் வழிமறித்துச் சோதனையிட்ட போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் அதிகாரி ஒருவரின் இடது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

