ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை இந்தியா நிறுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்திய மத்திய அரசு இதனை மறுக்கவில்லை. இருந்தாலும் விளக்கமளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, டொனால்ட் ட்ரம்ப் கூறியதை மறுக்கவில்லை.
ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பாக நீண்ட விளக்கம் வழங்கப்பட்டிருந்தாலும், டொனால்ட் ட்ரம்ப் மோடியின் பெயரை உச்சரித்துக் கூறிய அக் கருத்தை தெளிவான முறையில் நிராகரிக்கப்படவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளதாக விபரிக்கப்பட்டுள்ளது.
நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை இந்தியக் கொள்கையின் இரட்டை இலக்காக உள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே வேளை டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அக் கருத்துக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ரசியாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்க் கொள்வனை செய்யாது என்ற அறிவிப்பை ஏன் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, ட்ரம்பைக் கண்டு மோடி அச்சமடைவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவுடன் நெருக்கமாகவுள்ள ரசியாவுடன் இந்தியா பாரம்பரிய உறவை, நீண்டகாலமாக பேணி வருகின்றது. இதனால் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்துச் செயற்படும் இந்தியாவுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
சீன – ரசிய பொருளாதார கூட்டான பிறிக்ஸ் கட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் பின்னணியில், ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய்க் கொள்வனவை இந்தியா நிறுத்தும் என டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.