Saturday, December 6, 2025 1:34 pm
நாட்டை புரட்டிப்போட்ட டித்வா புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சுயநிலைக்கு கொண்டுவருவதற்கான விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளையும் அறிவித்தார்.
இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் உரையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பின்வரும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும், வீடுகளை சுத்தம் செய்து பாதுகாப்பாக மீண்டும் குடியேறுவதற்காக ரூ. 25000 வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட வீட்டில் மீளக் குடியேற அத்தியாவசிய சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 50000 நிவாரணம் வழங்கப்படும்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களுக்கு, 2 பேர் அல்லது குறைவான உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 25000 ரூபாவும், 2 பேருக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 50000 ரூபாவும் வழங்கப்படும்.
வீடுகளை முழுமையாக இழந்த வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடு கட்டப்படும் வரை மாதம் 25000 ரூபா வழங்கப்படும். இந்த நிதி அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை வழங்கப்படும்.
அனர்த்தத்தால் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட ஒரு வீட்டு அலகுக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும். காணி இல்லையாயின் பாதுகாப்பு பகுதிகளில் அவர்களுக்கு காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிடின் காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பகுதியளவு சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்க்க மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை நிதி வழங்கப்படும்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக 5,165 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்..
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு அல்லது மீள நடவு செய்ய ஒரு ஹெக்டாருக்கு ரூ. 2 இலட்சம் ஒருமுறை வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணை உரிமையாளர்களுக்கு பண்ணைகள் பாதிக்கப்பட்டதற்காக ரூ. 2 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, மிகச் சிறு தொழில்முயற்சிகளை மீண்டும் இயங்கத்தக்க நிலைக்கு கொண்டுவர ஒவ்வொரு அலகுக்கும் ரூ. 2 இலட்சம் வழங்கப்படும்.
சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு அதிகபட்சம் ரூ. 4 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்க ஒரு மாணவருக்கு ஒருமுறை ரூ. 15000 வழங்கப்படும்.
அனர்த்தத்தால் சேதமடைந்த வணிகக் கட்டிடங்களுக்கு சேத மதிப்பீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டிட அலகுக்கும் அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
அனர்த்தத்தால் உயிரிழந்தவரின் அருகாமை உறவினருக்கோ அல்லது முழு ஊனமுற்றவருக்கோ ஒருவருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
இதேவேளை இந்த முழு திட்டமும் 28.11.2025 ஆம் தேதியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு 2464/30 மூலம் அறிவிக்கப்பட்ட அவசர அனர்த்த நிலைக்கான சிறப்பு நிவாரணமாக காணப்படுகிறது.
வங்கி அடிப்படையில் தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதோடு அதற்குரிய சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிடும் எனவும், காப்புறுதி நிறுவனங்களும் நிவாரணம் வழங்கும் அதற்குரிய அறிவுறுத்தல்களும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2026 ஆம் ஆண்டில் சொத்து வரி விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

