Friday, October 24, 2025 12:38 pm
போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், காசாவில் பசி நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், மனிதாபிமான விநியோகங்களைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச உதவிக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
முற்றுகையிடப்பட்ட பகுதிகளுக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அங்கு வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பாலஸ்தீனப் பகுதிக்குள் செல்வதற்கு இரண்டு வழிகள் மாத்திரமே திறக்கப்படுவதால், உதவிக் குழுக்களின் நாளாந்த இலக்கை அடைய முடியாத நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைமை பேரழிவைத் தரக்கூடியதாகவே உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
காசாவில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்த சனத்தொகையில் கால்வாசியினர் பட்டினியால் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஊட்டச்சத்து குறைபாடு தாய்மார்களை மட்டுமன்றி, புதிதாகப் பிறந்த குழந்தையின் மீது தலைமுறை தலைமுறையாக விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

