Thursday, November 20, 2025 11:40 am
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மையமாக கருதப்படும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அல்லது கல்வி பயின்ற சுமார் 10 பேரைக் காணவில்லை என உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸார் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 10 பேர் காணாமல் போன விடயம் வெளிப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் காஷ்மீரைச் சேர்ந்த மூவர் அடங்குவதாகவும் அவர்களின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் கடந்த 10 ஆம் திகதி செங்கோட்டைக்கு வெளியே அமோனியம் நைட்ரேட் எரிபொருளுடன் கூடிய ஹுண்டாய் ஐ20 காரை வெடிக்கச் செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அல்-ஃபலாஹ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகத்தின் நிறுவுனர் ஜாவத் அஹமட் சித்திக்கி பயங்கரவாத நிதியளிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். வாகனத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் கொண்டு டெல்லியில் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும்.

