Tuesday, November 11, 2025 10:33 am
டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்தில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ரக சிற்றூந்து நேற்று மாலை வெடித்து சிதறியுள்ளது. இச் சம்பவத்தில் இதுவரையில் குறைந்தது 9 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெடிப்பு சம்பவத்தின் மையமாக செயற்பட்ட ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ரக சிற்றூந்து தொடர்பில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் சரியாக மாலை 6.52 அளவில் நிகழ்ந்துள்ளது என டெல்லி பொலிஸ் ஆணையாளர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் ஆய்வு நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகவரக(NIA) அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை குழுவினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், நிலைமை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கினார்.
அனைத்து கோணங்களிலும், குறிப்பாகத் தீவிரவாதத் தாக்குதல் கோணத்தில், விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
HR26 CE 7674 என்ற இலக்கம் கொண்ட வெடித்துச் சிதறிய அந்த ஹூண்டாய் ஐ20 சிற்றூந்தின் அசல் உரிமையாளர், ஹரியானாவின் குருகிராம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் அந்த சிற்றூந்தை காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புல்வாமாவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றதாகத் பொலிஸாரி்டம் தெரிவித்துள்ளார்.
அந்த சிற்றூந்தை மூன்றாம் நபருக்கு மீண்டும் விற்றாரா என்பது குறித்து உடனடியாக கண்டறியப்படவில்லை.
எனினும், ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவுடன் சிற்றூந்து இணைக்கப்பட்டிருப்பது விசாரணையில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சுமார் 3000 கிலோ வெடிமருந்துகளைக் கைப்பற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களிடமும் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புல்வாமா என்பது 2019-ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்று பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவால் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 இந்திய இராணுவ சிப்பாய் கொல்லப்பட்ட துயரமான பகுதியாகும்.

