செவ்வந்தியுடன் தொடர்புபடுத்தி, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி மீது, குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருபது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மூத்த உறுப்பினர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களிலும் மற்றும் வேறு வழிகள் ஊடாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராகவே நேற்று திங்கட்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
குறிப்பாக, இணையவழி ஊடான பொய்யான பிரச்சாரங்கள் ராஜபக்ச மற்றும் அவரது நண்பர்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது முதல், நாமல் ராஜபக்சவுடன் தொடர்புபடுத்தி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு என்ற முறையில், திட்டமிட்டு அவதூறுகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.