Friday, January 23, 2026 1:43 pm
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி கண்டதுடன், தொடர்ந்து இவ்வாண்டு மூன்றாவது முறையாக இச்சர்வதேச சட்ட மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மூன்றாவது சர்வதேச சட்ட மாநாடானது இரு தினங்களும் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலைவரை இடம்பெறவுள்ளது.
ஆய்வு, மறுவடிவமைப்பு. மீள்நிர்மாணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு மாநாட்டின் தொனிப்பொருள் சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புகள் தொடர்பில் உரையாடவுள்ளனர்.
முதல்நாள் நிகழ்வின் மற்றுமொரு பிரதான அம்சமாக “சட்டத்தின் எதிர்காலம் ஆட்சி நிர்வாகம், தொழிநுட்பம், சமூகம் மற்றும் உலக பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழான குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
அதனை தொடர்ந்து யாழ் மண்ணின் பண்பாட்டுச்சுவடுகளை பிரதிபலிக்கும் பண்பாட்டு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவினர் கோரியுள்ளனர்.

