Tuesday, December 2, 2025 4:07 pm
பல தடைகளை வென்று படிப்படியாக மீண்டெழுந்த இலங்கைதீவை தற்போது “டித்வா புயல்” புரட்டிப்போட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம், ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று போன்ற செயற்கையான அனர்த்தங்களினால் வீழ்ச்சியை கண்டிருந்த இலங்கை அண்மைய காலங்களில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை சந்தித்து வந்திருந்தது.
இந்த நிலையில், புயல் எச்சரிக்கை தொடர்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும் நாட்டையே உலுக்கி நிற்கும் அளவிற்கு காணப்படும் என யாரும் எண்ணியிருக்கவில்லை.
இயற்கையிற்கு முன் மனிதன் ஒன்றுமேயில்லை என்பதனை எடுத்துக் காட்டுவது போன்று டித்வா புயலின் தாக்கம் இலங்கையை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.

கடந்த வாரங்களில் இலங்கையில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 410பேர் உயிரிழந்ததுடன் 352 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 13இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் தாக்கத்தில் இருந்து மீளுவதற்கு சுமார் 30பில்லியனுக்கும் அதிகமான தொகை தேவைப்படும் என அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கூறுவது என்றால் புயலின் வேகத்தை விட புயலுக்கு பின்னால் உள்ள அமைதியே இலங்கையை உலுக்குகின்றது.
அழகும் வனப்பும் என சுற்றுலா பயணிகளை ஈர்த்த மலைநாடு தற்போது சின்னபின்னமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் மண்சரிவுகளும் அதனால் மரண ஓலங்களும் என மலைநாட்டின் அழகு அழுகையாக மாறியுள்ளது.

பிள்ளைகளை இழந்து பெற்றோரும், பெற்றோரை இழந்து பிள்ளைகளும், குடும்பத்தை இழந்து தனித்து தவிப்பவர்கள் ஒருபுறம், குடும்பத்தினரின் நிலை தெரியாது தவிக்கும் உறவுகள் என தவிப்புக்களுடன் வாழும் நிலை இலங்கையில் எழுந்துள்ளது.
இது இவ்வாறு இருக்க வானுயர கட்டிடங்கள் கொண்ட கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கி தன்னிலை இழந்துள்ளது. ஏனைய பகுதிகளில் ஆறுகள், குளங்கள் பெருக்கெடுத்து தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் சென்று பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் தஞ்சம் புகுந்த மக்கள் என இலங்கையே உருமாறி காணப்படுகின்றது.

இனம், மதம் என பிளவுபட்டிருந்தபோதும் துன்பம் என வரும் போது மறந்துபோகாத மனிதநேயத்தினால் இலங்கை தற்போது மீண்டு வருகின்றது. வெள்ளநிவாரண பணிக்காக தமது ஒருநாள் உணவை தியாகம் செய்யும் சிறைக்கைதிகள், 2 கார்ட் பனடோலை உதவியாக கொடுக்கும் முதியவர், தாம் சேகரித்த பணத்தை கொடுக்கும் சிறுவர்கள் என மனிதநேயம் மாறாத உதவியால் இலங்கைதீவு மீண்டு வருகின்றது.
வெறுமனே இலங்கை அரசாங்கம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் உமது துன்ப வேளையில் பங்கு கொண்டுள்ளன. குறிப்பாக அனைத்துவிதத்திலும் உதவி செய்வதோடு மட்டுமல்லாது அவசர தேவைக்காக தமது நீண்டகால பகையை விட்டு வான்பரப்பை திறக்கும் இந்திய தேசம், உதவி என்றவுடன் தமது மீட்புபணியை வழங்கிய பாகிஸ்தான் அரசாங்கம், அவசர நிதிஉதவி புரியும் சீனா, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.
இவ்வாறாக மெல்ல மெல்ல இலங்கை தீவு மீண்டுவருகின்றது.
0000000000000000000

