Thursday, December 4, 2025 12:18 pm
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) இயக்குநர் ஜெனரல் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இவர் கருத்து வெளியிட்ட போது , இம்முறை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இப் பேரிடரால் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு , 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதனிடையே, நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது, நகரத்தை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளன.
பேரிடரில் மின்மாற்றிகள் மற்றும் மின் கட்டமைப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணியில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளது.
நாட்டின் நீர்ப்பாசன முறையும் பாரிய சேதங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வாவினால் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்து விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

