Monday, October 27, 2025 10:43 am
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து “மோந்தா” என்ற புயலாக தீவிரமடைந்து,ஒக்டோபர் 26, 2025 அன்று இரவு 11.30 க்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிமீ தொலைவில், நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலை வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28, 2025 அன்று காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து அக்டோபர் 28 அன்று மாலை ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

