Thursday, November 20, 2025 4:32 am
தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை பரப்பி சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரர், திருகோணமலைக்கு சென்று, பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருகோணமலையில் ஊடக சந்திப்பை நடத்திய ஞானசார தேரர், திருகோணமலை கடற்கரைப் பகுதியில் பலாத்காரமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை பற்றி நீண்ட வரலாறு ஒன்றை திரிபுபடுத்தி கூறியதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்..
சுனாமி ஏற்படும் முன்னரே குறித்த காணி புத்தர் சிலைக்கு உரியதாக இருந்தது என்றும் அது பௌத்த பிக்கு ஒருவருக்கு சொந்தமான பகுதி எனவும் தெரிவித்தார்.
பொலிஸார் பௌத்த குருமாரை தாக்க முடியாது என்றும், தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஞானசார தேரர் தெரிவித்தார். அரசியல் யாப்பில் பௌத்த சமய முன்னுரிமை பற்றியும் விளக்கினார்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் அங்கு சென்றமை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

