Tuesday, January 13, 2026 1:51 pm
பிரதமர் ஹரிணி அமரசூரியக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் போராட்ட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கல்வி அமைச்சு வாசலில் கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்டபோது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியதால் அவ்விடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது கல்வி அமைச்சரின் திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை என்றும், அவை நாட்டின் தேசியக் கல்வி முறையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
கல்வி அமைச்சரை விமர்சிக்கும் வகையிலான கேலிச்சித்திரங்கள் மற்றும் “Harini Go Home” போன்ற வாசகங்கள் அடங்கிய பாரிய பதாகைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கல்வித் துறையில் அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள் இந்தச் சீர்திருத்தங்கள் உடனடியாக நிறுத்தப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் எனவும் எச்சரித்தனர்.

