Monday, October 27, 2025 12:07 pm
தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வகிபாகம், ஜேவிபி எனப்படும் சோசலிச – இடதுசாரி தன்மை கொண்ட கட்சிக்குரியது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்.
இதனை மையமாகக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of China – CPC) ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா, ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் சீனாவுக்கு பயணம் செய்து நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பிமல் ரத்நாயக்க சீனாவுக்குச் சென்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஹைக்சிங் (Liu Haixing) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் உரையாடிய அமைச்சர் ரத்நாயக்க, தமது அரசாங்கத்தின் அரசியல் – பொருளாதார செயற்திட்டங்கள் பற்றி விளக்கி கூறியிருக்கிறார்.
இது பற்றி அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அவருடைய அமைச்சு அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் சீனாவை எப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வளர்த்ததோ, அதேபோன்று ஒரு செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என பிமல் ரத்நாயக்க சீனாவில் விபரித்திருக்கின்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் கேட்டிருக்கின்றார்.
அதேநேரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை, இலங்கைத்தீவின் பிரதான அரசியல் கட்சிகளான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன, சீன கம்யூனிஸ்ட் கட்சி நீண்டகால உறவை பேணுகின்றது.
இந்த அடிப்படையில் ஜேவிபியும் அந்த உறவை பேணுவதற்கு ஏற்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை, அமெரிக்க – இந்திய அரசுக்குக்குச் சாதகமாக செயற்பட வேண்டும் என கோரப்பட்டு வரும் நிலையில், குறிப்பாக வோசிங்டன் – புதுடில்லி கொழும்பு நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றது.
ஆனால் ஒப்பந்தத்தின் முழுமை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகவே அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வகிபாகம் ஜேவிபி என்பதை நிரூபித்துள்ளது என்ற அவதானிப்புகள் உண்டு.

