Monday, January 19, 2026 10:14 am
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடும் குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு 16 பாகை செல்சியஸ் வரை நிலவுவதற்கு சாத்தியமுள்ளது.
முதியோர், குழந்தைகள், நோயாளர்கள் மற்றும் குளிர் உணர்திறன் உள்ளவர்களுக்கு அசௌகரியத்தையும் சிலருக்கு பாதிப்புக்களையும் ஏற்படுத்தக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இந்த குளிர் நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் திறந்த வாகனங்களில் பயணம் செய்வோர், இரவு வேளையில் நெல் வயல் காவலுக்காக பரந்த வெளிகளில் இருப்போர், காட்டுப் பகுதிகளில் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் இரவுகளில் பட்டி மாடுகளை வைத்திருப்போர்,
குளங்கள், ஆறுகள், நீரேரிகளுக்கு அண்மித்து வாழ்பவர்கள், கடற்றொழிலில் ஈடுபடுவோர், குளிருக்கான அதிஉணர்திறன் மிக்கவர்கள், குளிரான வானிலையினால் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடியவர்கள் அடுத்த சில நாட்களுக்கு குளிர் நிலைமை தொடர்பில் மிக அவதானமாக இருப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் எனவும், 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சற்று கனமான மழை கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

