Monday, December 8, 2025 3:56 pm
போர்மியூலா 1 (Formula 1) காரோட்டப் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த லெண்டோ நோரிஸ் முதல் தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாகி வரலாறு படைத்தார்.
2025ம் ஆண்டிற்கான கடைசிப் போட்டியான அபு தாபி க்ரோன் ப்றீ போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று அவசியமான 15 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் 26 வயதான லெண்டோ நோரிஸ் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் சம்பியன் பட்டத்தை உறுதி செய்து கொண்டார். இப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (07 ) நடைபெற்றது.
இந்த வருட போர்மியூலா 1 காரோட்டப் போட்டியில் சம்பியன் பட்டத்திற்கு மெக்லெரன் அணியைச் சேர்ந்த லெண்டோ நோரிஸுக்கும் , ரெட் புல் அணியைச் சேர்ந்த முன்னாள் சம்பியன் மெக்ஸ் வெஸ்டப்பனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
வருடத்தின் கடைசி க்ரோன் ப்றீ போட்டிக்கு முன்னர் லெண்டோ நோரிஸ் 408 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திலும் , மெக்ஸ் வெஸ்டப்பன் 396 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் , நோரிசின் சக அணி வீரர் ஒஸ்கார் பியாஸ்ட்ரி 382 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.
இந் நிலையில் நோரிஸ் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கு 15 புள்ளிகளே தேவைப்பட்டது.
அபு தாபி க்ரோன் ப்றீ போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் அவசியமான 15 புள்ளிகளைப் பெற்ற நோரிஸ், 423 புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
இந்த வருட போர்மியூலா 1 போட்டியில் 7 சம்பியன் பட்டங்களை சூடியதால் நோரிஸ், வெற்றியாளர் மேடையில் 18 தடவைகள் தோன்றியிருந்தார்.
நடப்பு சம்பியன் மெக்ஸ் வெஸ்டப்பன் 421 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் ஒஸ்கார் பியாஸ்ட்ரி 410 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இப் போட்டி முடிவுகளுக்கு அமைய 1998க்குப் பின்னர் மெக்லெரன்ஸ் அணியைச் சேர்ந்த சாரதி ஒருவர் சம்பியனாகி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் உற்பத்தியாளருக்கான சம்பியன் பட்டத்தையும் மெக்லெரன் நிறுவனம் 833 புள்ளிகளுடன் தனதாக்கிக்கொண்டது. 27 வருடங்களின் பின்னர் இந்த இரு வெற்றிகளையும் மெக்லெரன் நிறுவனம் வென்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
26 வயதான நோரிஸ் கூறுகையில், ‘இதை என்னால் நம்ப முடியவில்லை. நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அழக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை’ என்றார். போர்மியூலா 1 கார் பந்தய பட்டத்தை ருசித்த 11-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமை நோரிஸையே சாரும்.

