Monday, December 1, 2025 2:47 pm
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பஸ்ஸில் செல்லும் வழியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பத்மநிகேதனின் உடல் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பஸ்ஸில் இருந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் 36 வயதான, தணிகாசலம் பத்மநிகேதன் என்ற இளைஞனே காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த பஸ் அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது சுமார் 60 பேர் வரையில் பஸ்ஸில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக பஸ்ஸில் சிக்கியவர்களை அருகில் இருந்த வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு, இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த பஸ்ஸில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

