Tuesday, April 7, 2026 4:20 pm
சாதிப்பதற்கு பார்வை ஒரு தடையல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் 17 வயதான மகள் ஈஸ்வரி என்னும் மாற்றுத்திறனாளி சிறுமியே, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக்கு நீரிணையை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்து இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும் தனது விடாமுயற்சியால் பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பும் கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்கு நீரிணையை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கிய ஈஸ்வரி பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்றடைந்துள்ளார்.
தொடர்ந்து 11 மணி 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.

இந்தச் சிறுமியின் சாதனை நீந்துவதற்கு பார்வை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணையை மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுமி ஜியா ராய் கடந்த 2022 நீந்திக் கடந்தார்.
அதேபோன்று சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் பெரியார்செல்வன் என்னும் 12 வயதான சிறுவன் கடந்த 2025 ம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

