Monday, April 6, 2026 11:22 am
19வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ஓட்டங்களினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐ.பி.எல். தொடரில் ரஜத் பட்டிதர் தலைமையிலான அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றி இதுவாகும். அதேபோன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக பெற்றுக் கொண்ட மூன்றாவது தோல்வி இதுவாகும்.
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதும் இந்த அணி துடுப்பாட்டத்தில் ஒரு உலக சாதனையை படைத்துள்ளது.
251 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டியடித்த போட்டியில் ஆயுஷ் மத்ரே மற்றும் மேட் ஹென்றி ஆகியோரைத் தவிர சென்னை அணியின் ஏனைய ஒன்பது துடுப்பாட்ட வீரர்களும் குறைந்தபட்சம் ஒரு சிக்ஸரையாவது அடித்துள்ளனர். ஒரு T20 இன்னிங்ஸில் ஒன்பது துடுப்பாட்ட வீரர்கள் சிக்ஸர் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியான ஆட்டத்தில் 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களை குவித்தது.
டிம் டேவிட் மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர். டிம் டேவிட் மூன்று பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் வெறும் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை குவித்தார். ரஜத் பட்டிதர் 19 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இவர்களைத் தவிர தேவதத் படிக்கல் 29 பந்துகளில் 50 ஓட்டங்களையும், பிலிப் சால்ட் 30 பந்துகளில் 46 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் சர்பராஸ் கான் 25 பந்துகளில் 50 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியானது பெங்களூரு அணியை புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு கொண்டு சேர்த்த அதேவேளை இந்தப் போட்டியில் தோல்வியடைந்து சென்னை அணி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக டிம் டேவிட் தெரிவானார்.
இதேநேரம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலேயே அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதுவரை 192 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மட்டும் 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தார்.
200 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார் காணப்படுகின்றார்.
இதேவேளை முந்தைய சாதனைகளாக 2025 IPL இல் 184 விக்கெட்டுகளை எடுத்து டிவைன் ப்ராவோவின் 183 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்திருந்தார்.
2024 ஆம் ஆண்டில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளேவில் அதிகமான டாட் பந்துகள் வீசிய சாதனையை 2022 இல் புவனேஷ்வர் குமார் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

