தமிழ்த் தேசிய கட்சிகள் தேல்தல் வியூகங்களில் மாத்திரம் கவனம் செலுத்தி வருவதாக பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
யாழ் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
முகப்புத்தக பதிவு முழுமையாக பின்வருமாறு,
“1992 இல் கொழும்பு பல்கலைக்கழக தும்முள்ள சந்தியில் இருந்த புத்தர் சிலையை இரவோடு இரவாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இணையும் நான்கு சந்திகளின் அகலத்தை பெருதாக்கிச் சுற்றுவட்டம் கட்டப்பட்டது. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது துணிவுடன் இப் பணியைச் செய்தார்.
பௌத்த பிக்குமாரின் கடும் எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவேயில்லை.
அதேபோன்று 1997 ஆம் ஆண்டு கொழும்பு புஞ்சி பொரளை நான்கு சந்தியில் இருந்த புத்தர் சிலையை, ஒரு இரவில் இடித்து அந்த இடத்தை தூய்மைப்படுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீர.
காரணம், அந்த புத்தர் சிலையை சுற்றி கம்பி வேலிகள் அடைக்கப்பட்டு அதற்குள் போதைப் பொருள் பாவனை மற்றும் பாலியல் சேட்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் பௌத்த பிக்குமாரின் எதிர்ப்பினால் மீண்டும் அந்த இடத்தில் சிறிய புத்தர் சிலையை அமைத்திருந்தார்.
எனினும் புத்தார் சிலையைச் சுற்றி மூடி மறைப்புகள் செய்யவதற்குத் தடை விதித்திருந்தார். அது இப்போதும் திறந்த புத்தர் நிலையாகவே உள்ளது.
இவ்வாறு தமக்குத் தேவையானபோது சிங்கள அரசியல் தலைவர்களே புத்தர் சிலைகளை அகற்றியுள்ள நிலையில், வடக்குக் கிழக்கில் மாத்திரம் சட்டவிரோத புத்தர் சிலைகளுக்கு ஏன் அனுமதி வழங்கப்படுகிறது?
அது மாத்திரமல்ல, தமிழர்களின் மரபுவழிச் சின்னங்களை அழித்து ஏன் பௌத்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்?
ஒரு காலத்தில் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் பலர் மகாயன பௌத்த சமயத்தை பின்பற்றியிருந்தனர். அந்தச் சின்னங்களைத்தான், தேரவாத பௌத்த பிக்குமார் தற்போது சிங்கள மயப்படுத்துகின்றனர்.
உண்மையில் மகாயான பௌத்த சின்னங்களை பாதுகாக்க வேண்டியது ஈழத்தமிழர்களின் பொறுப்பல்லவா? அந்த உரிமையைக் கூட தேரவாத பௌத்தத்தை பின்னபற்றும் சிங்களவர்கள் எடுத்துக் கொண்டமை அநீதியல்லவா?
தொல்பொருட்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரம் மாகாண சபைகளுக்குரியதல்லவா? ஏன் கொழும்பு நிர்வாகம் பொறுப்பெடுத்திருக்கிறது?
வகுப்பு 6 இல் இருந்து 11 ஆம் வகுப்பு வரையும் உள்ள வரலாற்று பாடநூலில் ஏன் பௌத்த சமய வரலாறும் அதற்குரிய சிங்களச் சொற்களும் புகுத்தப்பட்டிருக்கின்றன?
ஏன் யாழ்ப்பாண – வன்னி இராச்சிய வரலாறுகள் நீக்கப்பட்டன? திருகோணமலை கந்தளாய்க் குளத்தின் வரலாறு எப்படி சிங்களவர்களுக்குரியதாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது?
2016 இல் நல்லாட்சி என்று மார்தட்டிய மைத்திரி – ரணில் அரசாங்கமே பாடநுல்களில் வரலாற்றுத் திரிபுகளையும் சிங்களச் சொற்களையும் புகுத்தியிருந்தது.
இப்படி இன்னம் சொல்வதற்கு உண்டு. எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் பல தகவல்கள் உண்டு.
ஆனால் இவற்றைப் பற்றிப் பேசாமல், தமிழ்த் தேசிய கட்சிகள் தேல்தல் வியூகங்களில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன. ஆகவே பொது அமைப்புகள்தான் விழிப்படைய வேண்டிய காலமிது.“