Tuesday, February 10, 2026 1:29 pm
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்படும்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபை பிரிவுகளிலும் இன்று முதல் நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது.
1 கிலோ தனி இறைச்சி 2200 ரூபாய்க்கும், 1 கிலோ முள் இறைச்சி 2000 ரூபாய்க்கும் (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்), 1 கிலோ தனி முள்ளு 1200 ரூபாய்க்கும், 1 கிலோ ஈரல் 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர், தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் இறைச்சி கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுக்கு கொண்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், வரி பரிசோதகர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சி குத்தகை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

